ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் யாஷ் வியாஸ் (17) என்ற சிறுவன் வசித்து வந்தார். இவர் படித்து வந்த அதே பள்ளியில் படித்து வரும் மாணவியுடன் காதல் வசப்பட்டு உள்ளார். அந்த மாணவிக்கு வேறொருவருடன் திடீரென்று திருமணம் நடந்து விட்டது. இதுகுறித்து அறிந்ததும், யாஷ் அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதனால், சில நாட்களாக யாருடனும் சரிவர பேசாமல் வருத்தத்துடனேயே காணப்பட்டார்.
எனினும், அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், தனது சமூக வலைதள பக்கத்தில், காதலியின் திருமண விஷயம் அறிந்து வேதனையடைந்தேன் என பதிவிட்டு உள்ளார். இந்த நிலையில், திடீரென மகாத்மா காந்தி மருத்துவமனை வளாகத்தில் இரவு வேளையில் துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி பதிவை வைத்து பார்த்த போது சம்பவம் நடைப்பெற்ற அன்று யாஷ் வியாஸ் தனியாக சாலையில் நடந்து செல்வது நன்றாக தெரிகிறது. யாருமில்லாத அந்த சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் அவரைக் கடந்து செல்கின்றன. அப்போது அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொண்டு சாலையில் விழுவது பதிவாகியுள்ளது.
இது குறித்து பேசிய பில்வாரா நகரின் சிஓ, நரேந்திர தயாமா, துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பின்னர் சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஒரு நாள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் பலர் இது தொடர்பாக கமெண்டுகளில் விவாதித்து வருகின்றனர்.