குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தங்கள் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் பொது சவில் சட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்தது. அதோடு, இதற்காக ஒரு குழுவையும் அக்கட்சி நியமித்தது. குஜராத்தில் இதற்கு முன் எந்த கட்சியும் பெறாத வெற்றியை பாஜக தற்போது பெற்றுள்ளது. மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 156 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, குஜராத்தில் முதல்வராக பூபேந்திர படேல் மீண்டும் பொறுப்பேற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு, குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் காந்தி நகரில் நேற்று (டிச.10) நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டமன்றத் தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.
பூபேந்திர படேல் நாளை முதல்வராக பதவி ஏற்பார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் பாஜக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்திர படேலிடம், புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்திற்கான ஒப்புதல் வழங்க திட்டமுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பூபேந்திர படேல், “குஜராத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.