பிரதமர் மோடி, அமித்ஷா போன்று கடினமாக உழைத்தால் நாமும் வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுரகிக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கார்கே உரையாற்றினார். இமாசல பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதை போன்று கர்நாடகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். கர்நாடகத்தை சேர்ந்த தான், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கும் நிலையில், தனக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் விதமாக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தீவிரமாக இருப்பார்கள் என்று கூறினார். அவர்களை போன்று நம்முடைய தலைவர்களும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நாம் ஒற்றுமையாக இருந்து உழைத்தாலே கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி என்று கார்கே கூறியுள்ளார். நாம் ஒற்றுமையாக இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று தெரிவித்தார். எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று யாரும் இல்லை. அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்று கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார். அதுபோல அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதையும் மேலிடம் தீர்மானிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in