
மதுரை ரசிகர்கள் தங்களது தலைவர்களுக்கு போஸ்டர் அடிப்பதில் எப்போதுமே வித்தியாசத்தை காட்டி வருகிறார்கள். ரஜினி, கமல், அஜித், விஜய் என்று திரைப்பட நடிகர்களானாலும் சரி, அழகிரி, ஸ்டாலின் என்று அரசியல் தலைவர்களானாலும் சரி அவர்களுக்கு போஸ்டர் அடிப்பதில் வித்தியாசத்தை காட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த நிலையில் வரும் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாள் என்பதால் அதை முன்னிட்டு மதுரை ரசிகர்கள் ரஜினிக்கு போஸ்டர்கள் அடித்து மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில், ரஜினியை திருவள்ளுவர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். காவி உடையில் ரஜினி இருப்பது போலவும் போஸ்டர் ஒட்டியுள்ளனர் . இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ரஜினி பாஜகவில் சேரப் போகிறார் என்று பரபரப்பாக செய்தி வந்து கொண்டிருந்த சமயத்தில் அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க, பாஜக நிறத்தை என் மீது பூச பார்க்கிறார்கள். வள்ளுவர் மீதும் அதேபோல் பூச பார்க்கிறார்கள் . நானும் மாட்ட மாட்டேன் வள்ளுவரும் மாட்ட மாட்டார் என்று சொல்லி இருந்தார்.ஆனால் இப்போது அவரையே மாட்ட வைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.