பிரதமரை கொலை செய்ய தயாராகுங்கள் – காங். மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு

பிரதமரை கொல்ல தயாராகுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஒருவர் அழைப்பு விடுத்துப்பேசியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் திக்விஜய் சிங் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் பதவி வகித்தவர் ராஜா பட்டேரியா. இவர் தற்போது மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ளார்.

பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார் என்று கூறினார். மதம், சாதி, மொழியின் பெயரால் மோடி பிளவுபடுத்துவார் என்று சாடினார்.

ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக கூறிய அவர், அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள் என்றார். அவரை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள் என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றது. நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் அமைச்சரே கொல்லுமாறு அழைப்பு விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேச்சுக்கு ராஜா பட்டேரியா மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிரான பட்டேரியாவின் பேச்சு கடும் ஆட்சேபத்துக்கு உரியது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு இருப்பதாக மிஷ்ரா கூறியுள்ளார். அதன்படி ராஜா பட்டேரியாவுக்கு எதிராக காவலர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே ராஜா பட்டேரியா தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நான் யாரையும் கொல்ல வேண்டும் என்று கூற மாட்டேன் என்று பேசியுள்ளார். அரசியல் சாசனத்தையும், ஆதி திராவிடர்களையும், பழங்குடியினரையும், சிறுபான்மையினரையும் பாதுகாக்க மோடியை வீழ்த்துங்கள் என்றுதான் பேசினேன் என்று பட்டேரியா விளக்கம் அளித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.