
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் எம் எம் கீரவாணி. இவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் ‘அழகன்’, ‘ நீ பாதி நான் பாதி’ , ‘ வானமே எல்லை’ , ‘ஜாதிமல்லி’ ஆகியனவாகும்.
தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.சமீபத்தில், சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் சர்வதேச விருது பெற்றார் கீரவாணி. ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ மற்றும் ‘ரௌத்ரம் ரணம் ருத்திரம்’ ஆகிய பான்-இந்தியா திரைப்படங்களின் இசைக்காக ரசிகர்களால் கவனிக்கப்பட்ட கீரவாணி, இந்தியாவின் மிகவும் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தாயார் மரணமடைந்துள்ளார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது தாயார் பானுமதி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கீரவாணியின் குடும்பத்தினர் பானுமதியின் உடலை எஸ்.எஸ்.ராஜமௌலியின் இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும்.