கேரள பெண்ணை திருமணம் செய்யும் ஆசையால், கர்நாடகாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இழந்ததோடு, வேலையில் இருந்தும் நீக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பல்லாரி சண்டூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தேவேந்திரப்பா (40). இவர் திருமணத்துக்காக பெண் வேண்டி, ‘மேட்ரிமோனியல்’ தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இதைப் பார்த்த கேரளாவைச் சேர்ந்த ஹர்ஷிதா என்ற பெண், தேவேந்திரப்பாவை தொடர்பு கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதோடு, ‘தற்போது, நான் எம்.பி.பி.எஸ். படிக்கிறேன். படிப்பை முடிக்க உதவுங்கள். படித்து முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம்’ என ஆசை வார்த்தை கூறினார்.
திருமண பதிவு தளத்தில் இருந்த போட்டாவை பார்த்து அசந்து போன தேவேந்திரப்பா, பல மாதங்களாக, அவர் கேட்டபோதெல்லாம் பணம் அனுப்பி வந்தார். அதன்படி, மொத்தம், 8.50 லட்சம் ரூபாய் அனுப்பி இருந்தார். ஒருமுறை, அந்தப் பெண் தன்னை சந்திக்க வரும்படி கூறியதை நம்பி ஹைதராபாத் வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். மேலும், காதல் மோகத்தில் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுத்ததால், அவரை பள்ளி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி விட்டது.
இதன் பின்னர், தேவேந்திரப்பாவை திருமணம் செய்ய ஹர்ஷிதா மறுத்து விட்டார். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னிடம் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக கூறி ஹர்ஷிதா மீது பல்லாரி சைபர் கிரைம் போலீசில் தேவேந்திரப்பா புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.