
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ம் தேதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு, திரையுலகினர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆன்மீகத்தின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட ரஜினிகாந்த் நேற்று இரவு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்தார். அவர்கள், திருமலையில் உள்ள டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினர்.
இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த ரஜினிகாந்த் மற்றும் அவருடைய மகள் ஐஸ்வர்யாவை தேவசம் போர்டு செயல் அதிகாரி தர்மா ரெட்டி கோயில் மகா துவாரம் முன்பு வரவேற்று சுவாமி தரிசனம் செய்துவைத்தார்.

சுவாமி தரிசனம் செய்த பின்னர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டு பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “6 வருடம் கழித்து ஏழுமலையானை தரிசனம் செய்தது திவ்ய அனுபவமாக இருந்தது” என்று கூறினார்.