
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று அவர் அளித்த பதிலில் இதற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் இடையிலான வேலையின்மை விகித நிலவரம் குறித்த தரவுகளை அமைச்சர் பகிர்ந்தார்.

நாடு முழுவதும் 2019-2020 இல் 4.8%ஆக இருந்த வேலையில்லா நிலை, 2020-2021 இல் 4.2%ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற பகுதிகளில் வேலையின்மை நிலை 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் முறையே 7.6% மற்றும் 6.9% ஆக இருந்தது.

2020-21ல் இந்த விகிதம் 6.7% ஆகக் குறைந்துள்ளது என அமைச்சர் ராமேஸ்வர் தெலி அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று ஊரகப் பகுதிகளில் 2019-20 இல் 3.9% ஆக இருந்த நிலை, 2020-21 இல் 3.3% ஆக சரிந்துள்ளது.

பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளைவிட அதாவது 24.5% மற்றும் 30.0% விட 2020-21 இல் 32.5% ஆக அதிகரித்திருப்பதாக அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in