அவதார் 2 திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 41 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. இந்நிலையில் படம் பார்க்க வந்த நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிரெட்டி ஸ்ரீனு. இவர் தனது தம்பியுடன் திரையரங்கிற்கு சென்று நேற்று முன்தினம் வெளியான அவதார்-2 படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். படம் பார்த்து கொண்டிருக்கும் போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, அவரை உடனடியாக அருகில் உள்ள பெத்தபுரம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லட்சுமிரெட்டி ஸ்ரீனுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த லட்சுமிரெட்டி ஸ்ரீனுவுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
முன்னதாக, தைவானில் 42 வயதுடைய நபர் ஒருவர் அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2010-ல் வெளியானபோது, அதனை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். உயிரிழந்த அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘திரைப்படத்தைப் பார்த்தபோது இருந்த அதிகமான உற்சாகம் அவரது மாரடைப்பு அறிகுறிகளைத் தூண்டியது’ என தெரிவித்தனர்.