கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய சுரங்கம் மற்றும் ஏற்கனவே உள்ள சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக பொன்விளையும் பூமி 25 ஆயிரம் ஏக்கரை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்.எல்.சி. நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்தி இருக்கின்றன.
கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கான இந்த நடவடிக்கைகளை பாமக கடுமையாக கண்டித்துள்ளது. நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்களின் வேளாண் நிலங்களை கையகப்படுத்தி அமைக்கப்பட்ட சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களை பயன்படுத்தி என்.எல்.சி. நிறுவனம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் நவரத்னா நிறுவனமாக உருவெடுத்துள்ளதாக அன்புமணி குறிப்பி்ட்டுள்ளார்.
என்.எல்.சி. முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர்நிலங்களும், 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இவை தவிர 3-வது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, சிறுவரப்பூர், உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 12 ஆயிரத்து 125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவற்றின் பரப்பு இதுவரை கையகப்படுத்தப்பட்ட 37 ஆயிரத்து 256 ஏக்கரில் சுமார் 4-ல் 3 பங்காகும். என்.எல்.சி. நிறுவனத்துக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும். மலைக் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் இந்த நிலங்களில் விளையும். இப்போது கூட அங்கு நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் விளைகின்றன.
ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித்தரக்கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காக பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என்.எல்.சி. நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிப்பதை பா.ம.க. அனுமதிக்காது என்று கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 7 மற்றும் 8-ந் தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
newstm.in