ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த சரண் (40) என்பவர் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு முதலே இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாட்டால் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
ஆண் குழந்தை வேண்டும் என்றும் வரதட்சனை பணம் கேட்டும் இவர் மனைவியை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அவருக்கு விசாகப்பட்டணத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பெண்ணை இவர் திருமணம் செய்ய விரும்பிய நிலையில், இவரது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். மனைவியை விவாகரத்து செய்ய இவர் காரணம் தேடிய நிலையில், விபரீதமான யோசனை வந்தது.
அதன்படி மனைவிக்கு பரிசோதனை செய்யவேண்டும் என்று ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று அங்கு HIV-யால் பாதிக்கப்பட்ட ரத்தத்தை மனைவிக்கு செலுத்தியுள்ளார். இது மனைவிக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டபோது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி தனது கணவரின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in