
இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன், சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
அண்மை காலமாக அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய – சீனப்படை மோதல் நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, கூறுகையில், தற்போது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் நிலைமை மேம்பட்டு வருகிறது என்றார். சீனாவுக்கு வளைந்துகொடுக்கும் தன்மை உண்டு. ஆனால் நான் சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை என்றார்.
இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன் என்று கூறிய அவர், அதுதான் என் இடம் என்றார். இது எனது நிரந்தர குடியிருப்பு என்று கூறிய தலாய் லாமா திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க சீனா தயாராக இல்லை என்றார்.

1959-ல் திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தலாய் லாமா தஞ்சம் புகுந்தார். அப்போது முதல் இந்தியாவில் தான் இருந்து வருகிறார்.
தொடர்ந்து திபெத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீனாவிடம் அவர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், சீனாவோ இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in