பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 6 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆறாட்டுபுழா எனும் பகுதியில் ஆற்றின் குறுக்கே பாலம் வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே வந்த மற்றொரு காருக்கு இந்த கார் வழிவிட்டது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த இந்த கார் பாலத்தின் தடுப்புச் சுவர்களை இடித்து ஆற்றுக்குள் தலைகீழாக கவிழ்ந்தது. சத்தம் கேட்டு அங்கு கூடிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணியில் இறங்கினர். கவிழ்ந்த காரை கயிறு கட்டி ஆற்றின் ஓரமாக கொண்டு வந்து காருக்குள் சிக்கி இருந்த ஆறு பேரையும் மீட்டனர்.
ஆறு பேரில் 6 வயதுடைய ஒரு குழந்தை உட்பட மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in