டெல்லி ரெயில்வே நிலையத்தில் முகாமிட்டிருந்த சில இளைஞர்கள் பிளாட்பாரங்களில் ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். இதனை கவனித்த ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞர்களில் சிலரை அழைத்து கேட்டிருக்கிறார்கள். அப்போது அந்த இளைஞர்கள் தங்களுக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை, கிளார்க் வேலை, போக்குவரத்து உதவியாளர் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும், இதற்காக தங்களை ரயில்களை கணக்கெடுக்க சொல்லி இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரித்த போது இது ஏமாற்று வேலை என்பது தெரியவந்தது. விருதுநகரை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சுப்புசாமி, அப்பகுதியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கோவையை சேர்ந்த சிவராமன் என்பவர் தான் டெல்லியில் எம்.பிக்கள் குடியிருப்பில் தங்கி இருப்பதாகவும், டெல்லியில் என்ன காரியம் ஆக வேண்டுமென்றாலும் பார்த்து கொள்ளலாம் என்று அளந்து விட்டுள்ளார். மேலும் ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் முதல் பல வேலைகள் இருக்கிறது. எனக்கு தெரிந்த விகாஸ் ராணா (25) என்பவர் வடக்கு ரெயில்வேயில் உயர் அதிகாரியாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். அதை நம்பிய சுப்புசாமியும் உள்ளூரில் படித்த சில இளைஞர்களிடம் தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவல் பலருக்கும் தெரியவரவே 28 பேர் வேலை கேட்டு அணுகி இருக்கிறார்கள். மேலும் அவர்கள் ரூ.2 லட்சம் முதல் 24 லட்சம் வரை வசூலித்து மொத்தம் 2½ கோடி ரூபாயை விகாஸ் ராணாவிடம் கொடுத்து இருக்கிறார்கள். அவர் அந்த பணத்தை வசூலித்துவிட்டு பயிற்சி வகுப்புகள் என கூறி சில சான்றிதழ்களை கொடுத்து ஏமாற்றி ரயில்களை எண்ணவைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.