பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தொடங்கும் என்று முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி, ஹிமாச்ல், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டீகர் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும். ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பஞ்சாபில் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (டிச.21-ம் தேதி) முதல் ஜனவரி 21-ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தொடங்கும் என்றும், பள்ளி முடியும் நேரத்தில் மாற்றமில்லை என்றும் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பஞ்சாபில் பள்ளிகள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.