திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அச்சமடைந்துள்ள மாணவ – மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கால்நடை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வன விலங்குகள் உலா வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு சிறுத்தை ஒன்று, நாய் ஒன்றை வேட்டையாடி அதன் உடல் பாகங்களை பல்கலைகழக வளாகத்திற்குள் போட்டுச் சென்றுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி வளாகம் முன்பு மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.