நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 16,000 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் உள்ள சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மூலம் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இப்படி தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவில் புதிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை அள்ளிக் கொட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அருகில் இருந்த தொழிலாளர்கள் ஓடிச் சென்று 5 பேரையும் மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் முழுவதும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 5 பேருக்கும் முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 5 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.