செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் பேட்டை பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா(20). கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர் தன்னுடைய சிறு வயது முதல் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தி வந்தார்.
2018-ல் நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் பங்கேற்று வென்றார். இதையடுத்து, அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவிக்கப்பட்டார். கடந்த செப்டம்பரில் ஃபாரெவர் ஸ்டார் இந்தியா அவார்ட்ஸ் அமைப்பு நடத்திய மாநில அளவிலான அழகிகள் போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.
இந்நிலையில், ஜெய்பூரில் மேற்கண்ட அமைப்பின் சார்பில் மிஸ் இந்தியா அழகி போட்டி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் பங்கேற்றனர். இதில், ரக்சயா மிஸ் இந்தியா போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.