தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் மணிப்பூரின் நானி நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் என்ற இடத்திற்கு வருடாந்திர ஆய்வுச் சுற்றுலா சென்றனர். அப்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் பள்ளி மாணவிகள் சிக்கி கொண்டனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, மலை மாவட்டத்தில் லாங்சாய் பகுதியருகே மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 55 கி.மீ. தொலைவில் பஸ் விபத்தில் சிக்கியுள்ளது.ஆண்டுதோறும் நடைபெறும் கல்வி சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் மாணவிகள் பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
இந்த விபத்தில் முதலில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. முதல்வர் பைரன் சிங் இந்த சம்பவத்திற்கு டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.
விபத்து பற்றி ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், விலைமதிப்பற்ற இளம் வயதினரின் இழப்பு மனவருத்தம் அளிக்கிறது. துயரில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வருவதற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.