
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலீபான்கள் பெண்கள் உயர்கல்விக்கு தடை விதித்து உள்ளனர். பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது உலக நாடுகளின் கண்டனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி என பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில்,இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், டுவிட்டரில் உருக்கமான கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- மகள்களுக்கு தந்தை என்ற நிலையில், அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிற ஒரு உலகத்தை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வழங்குவதற்கு என நிறைய இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு அனுமதி மறுப்பது என்பது மிகக்கொடிய பின்னடைவு ஆகும். இதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. தலீபான்களை, அவர்களின் செயல்களின் அடிப்படையில் நாம் தீர்மானிப்போம் என்று அதில் ரிஷி சுனக் கூறி உள்ளார்.
ரிஷி சுனக்கிற்கு கிருஷ்ணா, அனுஷ்கா என 2 மகள்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.