சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் ஆலோசனை மேற்கொண்டன.
இந்த நிலையில் உருமாறிய கொரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று பிற்பகல் 3 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல், மாநில தடுப்பூசி நிலவரம் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும். முந்தைய கொரோனா அலைகளை தடுக்க பணியாற்றியது போலவே, தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கொரோனா பரிசோதனை – தடமறிதல் – சிகிச்சையளித்தல் – தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தல் என்ற வியூகத்தை தொடர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
newstm.in