ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் 21 நாட்கள் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு இவ்விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று (டிச.22) இரவு தொடங்கியது.
இதைத் தொடர்ந்து இன்று (டிச.23) பகல்பத்து திருநாள் தொடங்குகிறது. ஜன.1-ம் தேதி வரை நாள்தோறும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து திருநாளில் மோகினி அலங்காரம் ஜன.1-ம் தேதி நடைபெறவுள்ளது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு ஜன.2-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற உள்ளது. அன்று முதல் ராப்பத்து திருநாள் தொடங்குகிறது.
தொடர்ந்து, ஜன.8-ம் தேதி திருக்கைத்தல சேவை, 9-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 11-ம் தேதி தீர்த்தவாரி, ஜன.12-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் மற்றும் இயற்பா சாற்றுமுறை ஆகியவை நடைபெறவுள்ளன.
இந்த விழாவையொட்டி கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள உள் மணல்வெளி மற்றும் வெளி மணல் வெளி ஆகிய இடங்களில் பிரம்மாண்ட அளவில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளேயும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் கோயில் உள்ளே செல்லவும், எளிதாக தரிசனம் முடித்து விட்டு வெளியே வரவும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு, ஸ்ரீரங்கம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்திலேயே மாநகர காவல் துறை சார்பில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.