பி.எஃப் 7 (BF 7) ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில், சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேபோல் மாநில அரசும் வெளிநாட்டு பயணிகளை கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்முடிவில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறிய தமிழக அரசு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, நாள்தோறும் 4000 பேருக்கு RT-PCR பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அதில் பாதிப்பு எண்ணிக்கை வெறும் ஒற்றை இலக்கத்தில் 6 அல்லது 7 என உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை பி.எஃப்.7 வகை கொரோனா பரவவில்லை. பொதுமக்கள் பதற்றப்பட வேண்டிய நிலை இல்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா அறிகுறிகள் இருந்தால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
newstm.in