திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். இதன்காரணமாக அங்கு 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.இந்த ஆண்டிற்கான விழா பகல்பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.அடுத்த மாதம் ஜனவரி இரண்டாம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். வைகுண்ட ஏகாதசி நாள் முதல் 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
மேற்கூறிய 10 நாட்களுக்கு தினமும் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருவதை முன்னிட்டு, 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம், கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், 27-ம் தேதி காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், திருப்பதியில் வரும் ஜன.1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.