துரோகிகளை வீழ்த்துவோம்: ஓபிஎஸ் தலைமையில் உறுதிமொழி..!

தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்று, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக அங்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியினர் மரியாதை செலுத்தினர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மகிழன்பன், டாக்டர்.சதீஷ், கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், “அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும். தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்” என்று, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.