
கேரளாவில் மேற்படிப்பு பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாள் மகப்பேறு விடுப்பு வழங்க மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
வழக்கமாக வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது நடைமுறையில் உள்ளது. ஆனால் முதல்முறையாக கேரளாவில் திருமணத்திற்கு பிறகு கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகப்பேற்றுக்கு முன்போ அல்லது பின்போ மகப்பேறு விடுப்பை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், முதலாவது அல்லது இரண்டாவது கர்ப்பகாலத்தில் வழங்கப்படும் இந்த விடுப்பு, மேற்கல்வி பயிலும் காலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

பொது, சாதாரண விடுமுறைகளும் மகப்பேறு விடுப்பு காலத்தில் உள்ளடங்கும் என்று கூறியுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், வேறெந்த விடுப்பையும் இதில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.
கர்ப்பமான மாணவிகள் மகப்பேறு விடுப்பில் இருக்கும்போது அவர்களுடைய படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக அவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மகப்பேறு விடுப்பில் இருக்கும் மாணவிகளுக்கு ஆய்வகம் மற்றும் உயிரியல் தேர்வுகள் இருந்தால் அந்தந்த துறையின் தலைவர் அவர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in