காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூர பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல தரப்பினரும் இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் இணைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அரியானாவில் யாத்திரை நடைபெற்ற நிலையில் இன்று டெல்லிக்குள் நுழைந்தது. டெல்லிக்குள் நுழைந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன், அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். டெல்லியில் ராகுல்காந்தியுடன் இணைந்து கமல்ஹாசன் நடைபயணம் மேற்கொண்டார்.
மாற்று கொள்கைகள் இருந்தாலும், தேச ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்றதாக கமல்ஹாசன் கூறினார். தன்னுடைய தந்தை காங்கிரஸை சேர்ந்தவர் என்றும் ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என்று குறிப்பிட்டிருந்தார், அதனால் தனக்கு சகோதரர் போன்றவர் என்று கமல்ஹாசன் கூறினார்.
அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன் என்று கூறிய கமல்ஹாசன், ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பது அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கூறினார்கள், ஆனால் மனசாட்சியை கேட்டு பயணத்தில் கலந்துகொள்ள முடிவு செய்ததாக குறிப்பிட்டார்.
newstm.in