பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கின் போது மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த நிலைமையை சமாளிப்பதற்காகவும், ஏழை எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ எனப்படும், ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம், இந்தத் திட்டத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.
இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்த ஆண்டு (2014) டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.