
தி.மு.க. அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் கிடைத்துள்ளதைப் பொறுக்க முடியாத வயிற்றெரிச்சலில் ஆதாரமற்ற அறிக்கை விடும் ஈபிஎஸ்க்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவுக்கு ஆதாரமாய் விளங்கும் பள்ளிக்கூடங்களை வலுப்படுத்தவும், கல்வித் தரத்தை மேலும் உயர்த்தவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலிலும் தலைமையிலும் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ள “நம்ம ஸ்கூல்” என்னும் “நம்ம ஊர்ப் பள்ளி திட்டத்திற்கு” ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத வயிற்றெரிச்சலில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விடுத்திருக்கும் அர்த்தமற்ற அறிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது.

திராவிட மாடல் அரசின்கீழ், பரந்துபட்ட சமூகத்தின் இலட்சியங்களுக்குச் செவிசாய்க்கும் பொதுக் கல்வி முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்துகொண்டிருக்கிறது. சமூகநீதி, உள்ளடக்கிய கல்வி, பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் பள்ளியோடு தொடர்புடைய சமூகத்தைப் பள்ளிக்குப் பொறுப்பாக மாற்றுவது போன்ற அனைத்தையும் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு உறுதிபூண்டு, அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அண்மையில் உருவாக்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் – நம்ம ஊர்ப் பள்ளி’ போன்ற ஒரு திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு உறுதியாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் வழி இயல்பாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர்ச் சமூகம் முன்வர வேண்டும் என்றால் அரசும் பொதுமக்களும் இணைவது அவசியம் என்கிற புரிதலோடும் உயர்ந்த நோக்கத்தோடும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் பழனிசாமி அவர்களின் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை; தவறாக முன்வைக்கப்பட்டுள்ளவை – ஏன் போலியானவை என்றே கூறிட விரும்புகிறேன்.
எல்லாவற்றையும் விட, அவரது அறிக்கையானது அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், அரசுப் பள்ளி மாணவ – மாணவிகளின் கல்வித் தரத்தை வலுப்படுத்தவும் தி.மு.க. அரசு கொண்டுள்ள தெளிவான உயரிய நோக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டு ஈபிஎஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.




newstm.in