
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாந்தோம், பெசன்ட்நகர் உள்பட தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் இருந்தே சிறப்பு ஆராதனையும், பாடகர் குழுவினரால் சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தூய ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தில் நேற்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும், இன்று காலை 7.30 மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.
இதே போல் சென்னை அடையாறு சி.எஸ்.ஐ. இயேசு அன்பர் ஆலயம், ஆவடியில் உள்ள அந்தோணியார் திருத்தலம் உள்ளிட்ட சென்னையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தும்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னையிலும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட 350 தேவாலயங்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.