மராட்டியத்தில் படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சக நடிகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மராட்டியத்தில் அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனீஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் வாலிவ் போலீசார், சக நடிகர் ஷீஜன் கான் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பின்போது, தேநீர் இடைவேளையில் நடிகை துனீஷா கழிவறைக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. தகவல் கிடைத்து சென்ற போலீசார், கதவை உடைத்து பார்ததில், துனீஷா தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் துனீஷாவுடன் இருந்தவர்கள், அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளனர். இந்நிலையில், தொடரில் நடித்து வரும் சக நடிகரான ஷீஜன் கான் என்பவர் மீது துனீஷாவின் தாயார் புகார் அளித்து உள்ளார். இதுபற்றி உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஷீஜன் கானை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். நடிகை துனீஷா முதன்முதலில் பாரத் கா வீர் புத்ரா – மகாராணா பிரதாப் என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். தவிர, இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, ஷேர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங் மற்றும் சக்ரவர்த்தி அசோகா சாம்ராட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் தொடர் தவிர, இந்தி திரைப்படங்களான பிதூர், பார் பார் தேகோ, கஹானி 2 துர்கா ராணி சிங் மற்றும் தபாங் 3 ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.
newstm.in