காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட தொடர் கொலைகாரன் சோப்ராஜ் பிரான்ஸ் சென்றடைந்தான்.
நேபாள நாட்டில் 2 வெளிநாட்டு பெண்களை கொலை செய்த வழக்கில் அங்கு ஆயுள் தண்டனை பெற்றிருந்த தொடர் கொலைகாரன், சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). இந்நிலையில் அவனது முதுமையை கருத்தில்கொண்டு விடுதலை செய்து நேபாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சோப்ராஜ், கத்தார் வழியாக நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்தான். பிரான்சில் உள்ள சோப்ராஜின் வழக்கறிஞர் இசபெல் கவுட்டன்ட் பெய்ர், ‘சுதந்திரம் பெற்றதில் சோப்ராஜ் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் இனி ஓய்வெடுப்பார்’ என்று கூறினார்.
சோப்ராஜின் வாழ்க்கையின் அடிப்படையிலான ஒரு திரைப்படத்தையும், நூலையும் வெளியிடும் பிரான்ஸ் சினிமா தயாரிப்பாளர் ஜீன் சார்லஸ் டெனியு, ‘சோப்ராஜ் நலமாக இருக்கிறார். பாரீசிலும், வேறு சில இடங்களிலும் அவர் வசிப்பார்’ என்றார்.
இதற்கிடையில், நேபாளத்தில் ஆயுள் தண்டனையில் இருந்து சார்லஸ் சோப்ராஜ் விடுதலை பெற்றுவிட்டாலும், அவன் மீது பிரான்சில் சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அந்நாட்டு அரசு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
newstm.in