தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 2-ம் தேதி அன்று சென்னையிலும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பை அரசு வழங்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கக் கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களிடம் இருந்து ஏன் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். கரும்பை கொடுத்தால் முக்கால் கரும்பு, ஒண்ணே கால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி பருப்பை கொடுத்தால் சிறிய முந்திரியாக இருப்பதாகவும்,வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே கோரியிருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.1,000 மற்றுமே அறிவித்த நிலையில், குறைந்தபட்சம், ரூ.2,500 ஆவது வழங்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும் கரும்பும் சேர்த்து கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.