மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியைச் சேர்ந்தவர் தனஞ்செய் (43). இவருக்கு சுஜித் (22), அபிஜித் (18) என 2 மகன்கள் உள்ளனர். சுஜித் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினீயராகவும், அபிஜித் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், தனஞ்செய்க்கு சமூகவலைதளம் மூலம் நாக்பூரைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு கிடைத்தது. இருவரும் சாட்டிங் செய்து வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இது பற்றி அறிந்த தனஞ்செய் குடும்பத்தினர் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறி வந்தனர். இந்த நிலையில், தந்தையின் தவறான நடத்தையை அறிந்த 2 மகன்களும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் போட்டனர். சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனஞ்செயை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியும், தலையணையால் அமுத்தியும் கொலை செய்தனர். பின்னர் உடலை இந்திராயணி ஆற்றின் அருகே எரித்து சாம்பலை ஆற்றில் வீசினர்.

கொலை செய்த தடயத்தை அழித்து விட்டு எதுவும் தெரியாத போல வீட்டிற்கு வந்தனர். ஒரு வாரம் கழிந்த நிலையில், தனது தந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனஞ்செயின் செல்போனை ஆய்வு செய்து விசாரித்தனர்.

இதில், நாக்பூர் பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது, உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல தடவை தனஞ்செய் தன்னிடம் தெரிவித்ததாக அப்பெண் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார், புகார் அளித்த 2 மகன்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது உறுதியானது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.