கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் போது சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக 2011-ல் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்தது, கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில், ஜனார்த்தன ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடவும், தீவிர அரசியலில் ஈடுபடவும் ஜனார்த்தன ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் வகையில் ஜனார்த்தன ரெட்டி தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இது பா.ஜ.க.வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. புதிய கட்சிக்கு கல்யாண ராஜ்ஜிய பிரகதி பாக்ஷா என பெயரிட்டுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி அறிவித்துள்ளார்.