சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பேருந்து டிப்போக்கள் உள்ளன. இவற்றில் அடையாறு பஸ் டிப்போ மிகவும் பழமையான பஸ் டிப்போ ஆகும். இந்நிலையில், இந்த பஸ் டிப்போவை மேம்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அடையாறு பஸ் டிப்போ மொத்தம் 5.63 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த டிப்போவில் இருந்து தினசரி 159 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2 மாடிகள் கொண்ட இந்த டிப்போவில் நிர்வாக அலுவலகம், வாகன நிறுத்துமிடம், டயர் பிரிவு, பராமரிப்பு பிரிவு, உணவகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதற்கு அருகில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. சோழிநங்கல்லூர் முதல் சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் அடையாறு பஸ் டிப்போவில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அமைய உள்ளது. எனவே, அடையாறு டிப்போவை பல்வேறு வசதிகளுடன் கூடிய 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி தரைத் தளம் மற்றும் முதல் தளம் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடமாக பயன்படுத்தப்படும். 2-வது தளம் பேருந்து டிப்போ மற்றும் வணிக கடைகள் இருக்கும் தளமாக இருக்கும். மூன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்படும். இவற்றில் தியேட்டர், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் ஆகியவைகள் இருக்கும்.
இந்த திட்டமானது ரூ.993 கோடி செலவில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.