கர்நாடகாவில், கிறிஸ்துமஸ் பண்டிகை நடந்த 2 நாட்களுக்குள் தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் பெரியபட்டினத்தில் புனித மேரி தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலத்தில் இருந்த குழந்தை இயேசுவின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களை எடுக்க முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஆனால், அதில் ஒரு உண்டியலை அந்த கும்பல் எடுத்துச்சென்றுள்ளது. திருட்டு நோக்கத்தோடு இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அதிக அளவிலான கூட்டம் இருந்ததால் உண்டியலில் அதிக காணிக்கை சேர்ந்திருக்கும் என்று எண்ணிய கும்பல் உண்டியலை கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என்றும், ஒரு உண்டியலை எடுக்க முடிந்த அவர்களால் எஞ்சிய 3 உண்டியலை எடுக்க முடியாததால் ஆத்திரத்தில் சிலைகளை உடைத்து சேதப்படுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிலைகளை சேதப்படுத்திவிட்டு உண்டியலை திருடிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.