ஒரு நபருடன் தவறான உறவில் இருந்ததால் என்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனது என்று நடிகை அஞ்சலி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. இதைத் தொடர்ந்து இவர் நடித்த ‘அங்காடித் தெரு’, ‘தூங்கா நகரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’, ‘இறைவி’ போன்ற படங்கள் அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.
இந்நிலையில் அஞ்சலி, ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தனக்கு நண்பராக அறிமுகமான ஜெய்யுடன் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘பலூன்’ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்த போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான சில புகைப்படங்களை இருவரும் வெளியிட்ட நிலையில், பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது.
மேலும், இடைப்பட்ட காலத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சரிவர திரையுலகில் கவனம் செலுத்தாமல் நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பது தான் என சில கிசுகிசு எழுந்த நிலையில், தற்போது முதல் முறையாக. டாக்சிக் ரிலேஷன் ஷிப் குறித்து ஊடகம் ஒன்றுக்கு அஞ்சலி கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்றும், நடிகை அஞ்சலி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபர் யார் என்பதை அஞ்சலி கூற மறுத்துவிட்டார்.