
இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் அனைவருக்கும் 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் 3 பயணிகள் சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்துள்ளனர்.அவர்களுக்கு நேற்று ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டத்தில், 36 வயது பெண்ணுக்கும், ஒரு குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளிடம் மேற்கொண்டு வரும் பரவலான பரிசோதனையில், கடந்த டிசம்பர் 24 முதல் 26 வரையிலான 3 நாட்களில் சர்வதேச பயணிகள் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.அவர்கள் அனைவரின் மரபணு தொடர் மாதிரி முழு அளவில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில், அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இது ஜனவரி மத்தியில் அதிக பரவலாக மாற கூடும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உயர்வின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த முறை கொரோனா அலை ஏற்பட்டாலும் அதன் பாதிப்பின் குறைவாக இருக்கும். இதேபோன்று உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்த்தல் ஆகியவையும் மிக குறைவாக காணப்படும் என்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.