மனைவியை மறந்த கணவர்…நடுகாட்டில் தவித்த துணைவி!…

தாய்லாந்தில் காட்டு பயணத்தின் போது, மனைவியை மறந்துவிட்டு கணவர் சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த பூண்டோம் சாய்மூன் (55) – அம்னுவாய் சாய்மூன் (49) தம்பதி விடுமுறையை கழிக்க மஹா சரகம் மாகாணத்திலுள்ள தங்களது சொந்த ஊருக்குப் சென்றுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் வாகனத்தை ஓட்டிசென்ற கணவர் பூண்டோம் இயற்கை உபாதையை கழிக்க வாகனத்தை ஓராமாக நிறுத்தி உள்ளார்.

அதே நேரம் மனைவி அம்னுவாயும் இயற்கை உபாதையை கழிக்க காரிலிருந்து இறங்கி உள்ளார். அந்தப் பகுதியில் கழிவறை இல்லை என்பதால் அருகில் இருந்த புதர் பகுதிக்குச் சென்று இருக்கிறார்.

அவர் திரும்பி வருவதற்குள் இயற்கை உபாதையை கழித்துவிட்டு வந்த பூண்டோம், மறதியாக வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். மனைவி காரில் இருக்கிறாளா? இல்லை என்பதை கூட பார்க்காமல் சென்று விட்டார். பின்னர் அவர் மனைவி, காரை நிறுத்திய இடத்துக்கு வந்து பார்த்த போது காரோடு கணவர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

செல்போனும் காரிலேயே வைத்திருந்ததால் அவரால் கணவரை உடனடியாக தொடர்புகொள்ள முடியாமல் தவித்து போனார். அதிகாலை நேரம் என்பதால் இருட்டில் பயந்து, யாரிடமும் உதவி கேட்க முடியாமல் கதறி அழுதிருக்கிறார். பின்னர் வேறுவழியின்றி, அவர் நடந்து செல்ல தீர்மானித்திருக்கிறார்.

காட்டு விலங்குகளின் பயம் ஒரு பக்கம், மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளிட்டவை நினைத்து பதற்றத்துடன் வேகமாக நடந்து, அதிகாலை 5 மணியளவில் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள கபின் புரி மாவட்டத்தை வந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, ஊர் எல்லையில் இருந்த காவல்துறை அதிகாரியின் செல்போனிலிருந்து தன்னுடைய கணவரை அழைத்திருக்கிறார்.

ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. காலை 8 மணியளவில்தான், மீண்டும் போலீசாரின் உதவியுடன் அவர் தன் கணவரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர் அப்போது 159.6 கிமீ தொலைவில் உள்ள கோரட் மாகாணத்துக்கே சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மனைவியை அழைத்துச் செல்ல வந்த கணவனிடம் காவல்துறை விசாரித்ததில், “இவ்வளவு நேரம், காரில் மனைவி இல்லை என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். அவள் பின்சீட்டில் அயர்ந்து தூங்குகிறாள் என்ற நினைத்து நான் சென்று கொண்டிருந்தேன்” எனக் கூறி தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

கணவனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட மனைவி, அவரோடு சண்டையிடாமல் அமைதியாக புறப்பட்டு சென்று இருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண், “எனக்கும் அவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 26 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரைப் பற்றிய புரிதல் எனக்கு இருக்கிறது” என கூறி உள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.