இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் கொரோனா கண்டறியபட்டபோதும் தொடக்கத்தில் அந்நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியது. ஆனால், விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முறியடிகப்பட்டது. மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், தொடக்கத்தில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தாத கொரோனா தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கிவிட்டது. கடந்த 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சீனாவில் மட்டும் 24.80 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரே நாளில் அதிகபட்சமாக 3.70 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் பிஎப்7 கொரோனா தொற்று இந்தியாவிலும் புகுந்ததையடுத்து, ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிசெய்துள்ளன. தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு போதிய அளவில் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளும்படி ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். எனவே அடுத்த 40 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுகையில், “கிழக்கு ஆசியாவில் புதிய கொரோனா தொற்று உறுதியான பின் 30- 35 நாட்களுக்கு பின் இந்தியாவில் அந்த தொற்று பரவும்” என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “புதிய வகை கொரோனா ஆபத்து குறைந்தது. ஒரு வேளை கொரோனா அலை ஏற்பட்டாலும் கூட இறப்பு, மருத்துவமனையில் அனுமதிப்பது போன்றவை குறைவாகதான் இருக்கும். கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வந்த பயணிகள் 6 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்தியதில் 39 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான உபகரணங்கள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவிய விரைவில் ஆய்வு நடத்த உள்ளார்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.