உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த குழந்தையின் தலை முதல் இடுப்பு வரை, பின்புறம் கருப்பு முடி வளர்ந்துள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, பிறந்த குழந்தைக்கு ஜெயண்ட் கான்ஜெனிட்டல் மெலனோசைடிக் நெவஸ் என்ற நோய் உள்ளது. இந்த நோயால், அவரது தலையில் இருந்து இடுப்பு வரை முடி வளர்ந்துள்ளது. வித்தியாசமான குழந்தை பிறந்தது குறித்த தகவல் கிடைத்ததும், தேசிய குழந்தைகள் நல உத்திரவாத திட்டத்தின் குழுவினர், சமூக நல மையத்தை அடைந்து, குழந்தையின் நோயை பரிசோதித்து சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் பங்கஜ் மிஸ்ரா கூறுகையில், கடந்த செவ்வாய்கிழமை ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் பிரசவத்திற்குப் பிறகு, துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் குழந்தையின் தலை முதல் பின்புறம் வரை கருமையாக இருப்பதைக் கண்டனர், அதன் பிறகு தேசிய குழந்தை நலத்திட்ட குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எம்ஓ டாக்டர் இக்ராம் ஹுசைன் தலைமையில் மருத்துவமனைக்கு வந்த குழுவினர் குழந்தையைப் பார்த்தனர். பின்னர் குழந்தைக்கு ஜெயண்ட் கான்ஜெனிட்டல் மெலனோசைடிக் நெவஸ் என்ற நோய் இருப்பதாக தெரிவித்தனர். இந்த நோய் மிகவும் அரிதானது மற்றும் இந்த குழந்தை சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பப்படும். விரைவில் குழந்தை நோயிலிருந்து மீண்டுவிடும் என்றும், தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் இக்ராம் ஹுசைன் தெரிவித்தார்.