தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளருமாக இருந்தவர் டாக்டர் மஸ்தான் (66). 1995-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்பியாக இருந்தார். இவர், ராயப்பேட்டை பாலாஜி நகரில் வசித்து வந்தார்.
கடந்த 22-ம் தேதி இரவு சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் மஸ்தான் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மஸ்தானின் உடல் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 22-ம் தேதி மாலை நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்த நிலையில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பமாக மஸ்தானின் சகோதரின் மருமகன் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, கார் டிரைவர் இம்ரான், நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகிய 5பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, மஸ்தானை இவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது அம்பலமானது. இயற்கை மரணம் என்று கூறப்பட்ட நிலையில் திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.