இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிராக கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடினார். இந்த நிலையில் தொடர் முடித்து ரிஷப் பண்ட் நேற்று முதல்நாள் டெல்லி திரும்பினார். டெல்லியில் இருந்த ரிஷப் பண்ட் பல்வேறு பணிகளுக்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு அவர் ப்ரோமோஷன்ம் பணிகள் மற்றும் பயிற்சி தொடர்பான பணிகளை மேற்கொள்ள சென்றுள்ளார்.
அப்போது ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளானது. அங்கிருந்து டிவைடரில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 5.15 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.பி தீஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் விசாரித்து வருகிறார்.
அங்கிருந்தவர்களால் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் முதுகுப்பகுதியிலும், தலைப்பகுதியிலும் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
விபத்து பகுதியில் நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “ரிஷப்பின் கார் டிவைடரில் மோதியது, அதன் பிறகு கார் தீப்பிடித்தது. மிகவும் சிரமப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதே நேரத்தில் விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் டெல்லி சாலையில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கார் நர்சன் நகரை அடைந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் உள்ள பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு கவிழ்ந்தது” என தெரிவித்தனர்.
25 வயதாகும் ரிஷப் பண்ட், தற்போது இந்திய அணியில் மிக முக்கிய நட்சந்த்திர வீரராவார். அடுத்தடுத்து இந்திய அணி பல்வேறு தொடர்கள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு விபத்து ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், கார் ஓட்டும் போது மயங்கி விழுந்ததால் ரிஷப் பந்த் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் கார் விபத்துக்குள்ளானது. காரில் தனியாக இருந்த பந்த், எரியும் வாகனத்தில் இருந்து தப்பிக்க ஜன்னலை உடைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.