சம வேலை, சம ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
தமிழகத்தில் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.
இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டம் 5ஆவது நாளை எட்டியுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதனிடையே இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆனால் பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால் முதலமைச்சரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
newstm.in