
கொரோனா பரவல் காலத்தில் ஆறு மாத காலத்துக்கு மாதம் ரூ.14 ஆயிரம் தொகுப்புபூதியத்தில் தற்காலிக செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு அடுத்தடுத்து பணிக்காலம் நீடிக்கப்பட்ட நிலையில், இறுதியாக நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் நேற்று முடிவடைந்த நிலையில் மீண்டும் பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது.

எத்தனையோ விஷயங்களில் தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவரும் திமுக அரசு, நெருக்கடியான நேரத்தில் தங்களது உயிரைத் துச்சமென நினைத்து பணியாற்றிய செவிலியர் பிரச்னையிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இது ஆட்சியல்ல; எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி என்பதற்கு செவிலியர்களை பணிநீக்கம் செய்திருப்பது மற்றுமொரு சாட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.