புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னை மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரைகளில் இன்று இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 6 மணிக்கு மேல் கும்பலாக வாகனங்களில் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை உட்புற சாலை இன்று இரவு 7 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்காக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தாண்டை முன்னிட்டு போதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாகசம் செய்தல், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை கண்டறிய தொழில்நுட்ப முறையில் ஏ என் பி ஆர் கேமரா மூலமாக தானாகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.