கொரோனா கால செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்க அரசு முடிவு செய்தது.
இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நர்சுகளின் பணி இன்றுடன் (டிசம்பர் 31-ம் தேதி) நிறைவடைகிறது.
இதை அடுத்து, தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என செவிலியர்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், ‘ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீடிப்பு இல்லை’ என, தமிழக சுகாதாரத் துறை சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு, எம்.ஆர்.பி. செவிலியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.