கொலை முயற்சி வழக்கில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குற்றவாளி ஒருவர் நீதிமன்ற அறையில் நீதிபதி மீது கல் எறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் உள்ள கீழமை அமர்வு நீதிமன்றத்தில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மேஷ் ரதோட் என்ற நபர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் கூடுதல் அமர்வு நீதிபதி ஏஆர் தேசாய் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, திடீரென தர்மேஷ் தான் மறைத்து வைத்திருந்த கல்லை எடுத்து நீதிபதியை நோக்கி வீசினார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட நீதிபதி தேசாய் கல் வீச்சு தாக்குதலில் இருந்து தப்பினார். இதையடுத்து, தர்மேஷை அங்கிருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தர்மேஷ் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், பணியை சரிவர மேற்கொள்ளவில்லை என 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in